இராசபாளையம் நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கு..
“குடிநீர்” என்ற பெயரில் தனியார் தொழிற்சாலைக்கு தேவையான தண்ணீரை சட்டவிரோதமாக உறிஞ்சி தொழிற்சாலையின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள துளை வழியே நிரப்பும் செயலை இராசபாளையம் நகராட்சி நிர்வாகம் கண்டுங்காணாமல் இருப்பது ஏன்?.
விருதுநகர்மாவட்டம் இராசபாளையம் ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணாபுரம் ஊராட்சி எல்கைக்குட்பட்ட ஆறாவது மைல் குடிநீர் தேக்கத்திற்கு எதிரே இராசபாளையம் மலையடிப்பட்டி அழகை நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நூற்பாலைக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது. இந்த பட்டா நிலத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து “தமிழ்நாடு நிலத்தடி நீர் ஒழுங்குமுறை சட்டம் 1988” க்கு விரோதமாக இரண்டு பெரிய டேங்கர் லாரிகளில் 24 மணி நேரமும் “குடிநீர்” என்ற பெயரில் தனியார் தொழிற்சாலைக்கு தேவையான தண்ணீரை சட்டவிரோதமாக உறிஞ்சி தொழிற்சாலையின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள துளை வழியே நிரப்பும் செயல் நடைபெற்று வருகிறது.
“குடிநீர்” என்றால் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒருநாளைக்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு எவ்வளவு? ஏன் 24 மணி நேரமும் இராசபாளையம் முடங்கியாறு சாலையில் நாள்தோறும் 2 லாரிகளில் தண்ணீர் எடுத்து செல்லப்படுகின்றன? தொழிற்சாலைக்கு தேவையான தண்ணீர் என்றால் ஏன் “குடிநீர்” என்ற பெயரில் எடுத்துச் செல்லப்படுகிறது?
தனியார் பட்டா நிலமாக இருந்தாலும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு மேற்படி சட்டம் அனுமதிக்காத நிலையில் அதிகமான அளவு தண்ணீரை எடுத்துச் செல்ல அனுமதி அளித்தது யார்?
சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது என்றால் அதனை கண்காணிக்க வேண்டிய அரசு அதிகாரிகள் மெத்தனம் காப்பது ஏன்?
கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு இதனை தடுப்பதற்கு பொறுப்பு இருக்கும்போது இந்த விவகாரத்தை கண்டுங்காணாமல் உள்ளார்களா?
இந்த தனியார் தொழிற்சாலை தண்ணீர் உறிஞ்சி எடுக்கும் நிலத்திற்கு எதிரே இராசபாளையம் நகராட்சி குடிநீர் தேக்கம் உள்ளபோது அங்குள்ள நிலத்தடி நீர் , அணை நீர் மட்டம் குறைய வாய்ப்புள்ள நிலையில் இதனை இராசபாளையம் நகராட்சி நிர்வாகம் கண்டுங்காணாமல் உள்ளதா?
✍️ விருதுநகர் S.P.பூமாரி