உ.பியில் 116 பேர் பரிதாப பலி
உ.பி யில் 116 பேர் பரிதாப பலி..
*கூட்ட நெரிசலில் சிக்கி உ.பி.யில் 116 பேர் பரிதாப பலி: சாமியாரின் சொற்பொழிவை கேட்க வந்தபோது விபரீதம்*
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தரஸ் மாவட்டத்தில் சாமியாரின் சொற்பொழிவு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 116 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் புல்ராய் என்ற கிராமம் உள்ளது. இங்கு நாராயண் சாகர் விஷ்வ ஹரி என்கிற போலே பாபா எனும் சாமியாரின் மடம் அமைந்துள்ளது. அனைத்து மக்களாலும் போலே பாபா என்று அழைக்கப்படும் அவரது மடத்தில் அனைத்து மதத்தினரும் பங்கேற்கும் மனிதநேய மங்கள சந்திப்பு என்ற பெயரில் நேற்று சொற்பொழிவு நடைபெற்றது.
இதில், ஹத்ராசை சுற்றியுள்ள மாவட்டங்களின் கிராமவாசிகள் ஆயிரக்கணக்கில் வந்து கலந்து கொண்டனர். சுமார் 1.25லட்சத்திற்கு மேல் பக்தர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டம் முடிந்து பக்தர்கள் வெளியேறியபோது நெரிசல் ஏற்பட்டது. தள்ளுமுள்ளு காரணமாக ஒருவர் மீது ஒருவர் விழத் துவங்கியுள்ளனர். இதனால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு வெளியேறும் வழி தெரியாமல் பலரும் மயங்கி விழுந்துள்ளனர். மயங்கிய பலர் அதே இடத்தில் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.
இவர்களில் 27 பேரின் உடல்கள் அருகிலுள்ள எட்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதில் 23 பேர் பெண்கள். 3 சிறுவர்கள் ஆவார்கள். மேலும் இந்த நெரிசலில் படுகாயம் அடைந்த பலரும் அருகிலுள்ள ஹத்ராஸ், அலிகர், எட்டா அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த அரசு மருத்துவமனைகளின் பிணவறைகள் நிறையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பலர் ஆங்காங்கே உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிலும் பலர் உயிரிழந்தனர்.
இது குறித்து ஆக்ரா மண்டல காவல் துறை ஏடிஜியின் மக்கள்தொடர்பு அலுவலகம் சார்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 116 என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் பல்வேறு மருத்துவமனைகளில் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலியானவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. ஹத்ராஸ் நிர்வாகம் மற்றும் காவல் துறையினருடன் அருகிலுள்ள எட்டா மாவட்டத்தின் காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார்சிங் மற்றும் எட்டா மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியான உமேஷ் சந்திர திரிபாதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
சம்பவ இடம் போர்க்களம் போல் காட்சி அளித்தது. எங்கு பார்த்தாலும் பலியானவர்கள் உடல்களும், காயம் பட்டவர்களும் மயங்கிநிலையில் அங்கு கிடந்தனர். போதுமான ஆம்புலன்ஸ்கள் இல்லாததால், உள்ளூர் கிராமவாசிகள் உதவியுடன் கிடைத்த வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மருத்துவமனைகளுக்கு வெளியேயும் காயம் பட்டவர்கள் ஏராளமானோர் படுக்க வைக்கப்பட்டனர். சில மருத்துவமனைகளில் ஒரு மருத்துவர் மட்டுமே இருந்ததால் உரிய நேரத்தில் சிகிக்சை அளிக்க முடியவில்லை. இதனால் அவர்களை சிகிச்சைக்காக கொண்டு சென்றவர்கள் அதிருப்தி அடைந்தனர்
நாட்டையே உலுக்கிய இந்த நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய அவர் இதை தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அமைச்சர்கள் லக்ஷமி நாராயண் சவுத்ரி மற்றும் சந்தீப் சிங் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்லுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதே தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைமை இயக்குநரும் அங்கு செல்லும்படியும், உரிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கும்படியும் யோகி அறிவுறுத்தி உள்ளார். மேலும் உபி அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என அறவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் உபி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் மருத்துவக் குழுவை ஹத்ராஸ் செல்ல உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். இந்த நெரிசலில் பலியானவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல், சோனியா, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
அதிக உயிர்பலி வாங்கிய நெரிசல் சம்பவங்கள்
* 2005ம் ஆண்டில் மகாராஷ்டிராவின் மந்தர்தேவி கோயிலில் 340க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறந்தது, 2008ல் ராஜஸ்தானின் சாமுண்டா தேவி கோயிலில் குறைந்தது 250 பேர், இமாச்சல் நைனாதேவி கோயிலில் 2008ல் 162 பேர் பலியானதுதான் சமீப காலங்களில் அதிக நெரிசலால் ஏற்பட்ட மிகப்பெரிய பலி ஆகும். அந்த பட்டியல் வருமாறு:
* 2003 ஆகஸ்ட் 27: மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் கும்பமேளாவில் புனித நீராடும்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். 140 பேர் காயமடைந்தனர்.
* 2005 ஜனவரி 25: மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள மந்தர்தேவி கோயிலில் ஆண்டு யாத்திரையின் போது 340க்கும் மேற்பட்ட பக்தர்கள் மிதித்து கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பக்தர்கள் தேங்காய் உடைத்ததால் வழுக்கி படியில் சிலர் தவறி விழுந்ததில் விபத்து ஏற்பட்டது.
* 2008 ஆகஸ்ட் 3: இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள நைனா தேவி கோயிலில் பாறைகள் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட நெரிசலில் 162 பேர் உயிரிழந்தனர். 47 பேர் காயமடைந்தனர்.
* 2008 செப்டம்பர் 30: ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் உள்ள சாமுண்டா தேவி கோவிலில் வெடிகுண்டு வெடித்ததாக வதந்தி பரவியதால் ஏற்பட்ட நெரிசலில் 250 பக்தர்கள் கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
* 2010 மார்ச் 4 : உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கிருபாலு மகாராஜின் ராம் ஜான்கி கோயிலில் இலவச ஆடைகள் மற்றும் உணவுகளை வாங்க மக்கள் கூடியிருந்தபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 63 பேர் கொல்லப்பட்டனர்.
* 2011 ஜனவரி 14: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள புல்மேடு என்ற இடத்தில் பக்தர்கள் மீது ஜீப் மோதியதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 104 சபரிமலை பக்தர்கள் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
* 2011 நவம்பர் 8: ஹரித்வாரில் கங்கை நதிக்கரையில் உள்ள ஹர்-கி-பௌரி காட் என்ற இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர்.
* 2012 நவம்பர் 19: பீகார் மாநிலம் பாட்னாவில் கங்கை நதிக்கரையில் உள்ள அதாலத் காட் என்ற இடத்தில் சத் பூஜையின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் கொல்லப்பட்டனர்.
* 2013 அக்டோபர் 13: மத்தியப் பிரதேசத்தின் தாடியா மாவட்டத்தில் உள்ள ரத்தன்கர் கோயில் அருகே நவராத்திரி விழாவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பக்தர்கள் கடந்து செல்லும் ஆற்றுப்பாலம் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக வதந்தி பரவியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
* 2014 அக்டோபர் 3 : தசரா கொண்டாட்டங்கள் முடிந்த சிறிது நேரத்திலேயே, பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 32 பேர் கொல்லப்பட்டனர். 26 பேர் காயமடைந்தனர்.
* 2015 ஜூலை 14: ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் ‘புஷ்கரம்’ விழாவின் தொடக்க நாளில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்த கோதாவரி ஆற்றங்கரையில் உள்ள முக்கிய நீராடும் இடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 27 பக்தர்கள் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
* 2022 ஜனவரி 1: ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற மாதா வைஷ்ணோ தேவி ஆலயத்தில் பக்தர்களின் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட நெரிசலில் குறைந்தது 12 பேர் இறந்தனர்.
* 2023 மார்ச் 31: ராம நவமியை முன்னிட்டு மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் நகரில் உள்ள கோவிலில் நடைபெற்ற ஹவன் நிகழ்ச்சியின் போது கிணற்றின் மேல் கட்டப்பட்ட ஸ்லாப் இடிந்து விழுந்ததில் குறைந்தது 36 பேர் உயிரிழந்தனர்.
* யார் இந்த போலே பாபா?
ஹத்ராசில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள மடத்தை வைத்துள்ள போலே பாபா என்கிற நாராயண் ஹரி உத்தரபிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில் உள்ள பகதூர் நகரி கிராமத்தில் பிறந்தார். அங்கு தனது ஆரம்ப படிப்பை முடித்தார். கல்லூரி படிப்பிற்கு பிறகு போலீசில் புலனாய்வு பிரிவில் 17 ஆண்டுகள் பணிபுரிந்தவர்.
போலீசாக இருந்த காலத்தில் ஆன்மீகத்தின் பக்கம் திரும்பியதால் அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு போலே பாபாவாக மாறிவிட்டதாக பக்தர்களிடம் அவர் அடிக்கடி கூறுவார். ஒரு குருவாக நாராயண் ஹரியின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, அவர் காவி உடைகளை அணியாமல், வெள்ளை நிற சூட் மற்றும் டையை அணிவார். அவரது மற்றொரு விருப்பமான உடை குர்தா-பைஜாமா ஆகும்.
* விபத்து நடந்தது எப்படி?
ஹத்ராஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் போலே பாபா மடத்தில் நிகழ்வு நடைபெற்ற இடம் மிகவும் சிறியதாக இருந்ததால், அங்கு கூடியிருந்த கூட்டத்திற்கு இடமளிக்க முடியாது என போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் பாபாவின் அழைப்பை ஏற்று மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். ஒரே நேரத்தில் அவர்கள் வெளியேற முற்பட்ட போது, அனைவரும் ஒரே இடத்தில் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டு இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
* எங்கு பார்த்தாலும் கண்ணீர் காட்சிகள்
ஹத்ராஸ் நெரிசல் சம்பவம் அதைச்சுற்றி உள்ள மருத்துவமனைகளில் கண்ணீர் காட்சிகளை ஏற்படுத்தியது. பல மருத்துவ மையங்களின் வெளியே இறந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே கிடத்தி வைக்கப்பட்டன. அவை சிதறியது போல் காட்சி அளித்தன. மக்கள் அதைச்சுற்றி நின்றி கண்ணீர் வடித்தனர். ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறினர். ஒரு பெண் ஒரு லாரியில் ஐந்து அல்லது ஆறு உடல்களுக்கு மத்தியில் அழுதுகொண்டே உட்கார்ந்து கொண்டு, வாகனத்தில் இருந்து தனது மகளின் உடலை வெளியே எடுக்க உதவுமாறு மக்களை வலியுறுத்தினார்.
ஒரு ஆணும் பெண்ணும் வெவ்வேறு வாகனத்தில் உயிரற்ற நிலையில் கிடப்பதையும் வீடியோ கிளிப் காட்டியது. பிணவறைக்கு வெளியே மக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு கோபமுடன் வந்த இளைஞர் ஒருவர்,’ கிட்டத்தட்ட 100-200 பேர் பலியாகி உள்ளனர், மருத்துவமனையில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே இருந்தார். ஆக்ஸிஜன் வசதி இல்லை. சிலர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். ஆனால் சரியான சிகிச்சை வசதிகள் இல்லை’ என்று ஆவேசம் அடைந்தார்.
* அனுமதி தந்தது யார்?
ஹத்ராஸ் மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் குமார் கூறுகையில், ‘இது ஒரு தனிப்பட்ட விழா. இதற்கு சப் கலெக்டர் அனுமதி அளித்துள்ளார். உள்ளாட்சி நிர்வாகம் மைதானத்திற்கு வெளியே பாதுகாப்பை வழங்கியது. அதே நேரத்தில் விழா நடந்த இடத்தில் அதற்கான ஏற்பாட்டை அமைப்பாளர்கள் தான் செய்து, கவனித்து இருக்க வேண்டும்’ என்றார்.
✍️ ஆசிரியர்