Vijilence Network

Vijilence News

22 கோடிக்கு மேல் மதிப்புடைய 6 தொன்மை வாய்ந்த சாமி சிலைகளை மீட்டு வரலாற்று சாதனைப் படைத்த தமிழக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு..

22 கோடிக்கு மேல் மதிப்புடைய 6 தொன்மை வாய்ந்த சாமி சிலைகளை மீட்டு வரலாற்று சாதனைப் படைத்த தமிழக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு..

22 கோடி மதிப்புடைய 6 தொன்மை வாய்ந்த சாமி சிலைகளை மீட்ட தமிழக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு..

பழங்கால சாமி சிலைகள் கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின்படி சிலை கடத்தல் பிரிவு டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் ஐபிஎஸ், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை தலைவர் டாக்டர். தினகரன் ஐபிஎஸ். உத்தரவின்படி சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர் சிவகுமார் ஐபிஎஸ் கடந்த மூன்று நாட்களாக விழுப்புரம் திருச்சி தஞ்சாவூர் பகுதியில் முகாமிட்டு சிறப்பு குழுக்களை ஊக்குவித்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து சிலை திருட்டு தடுப்புப் பிரிவின் 13 சரகங்களிலும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவின் திருச்சி சரக தனிப்படையானது கடந்த 6/7/ 2024 ஆம் தேதி தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில் தஞ்சை பெரியார் சமத்துவபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த TN52M1563 என்ற பதிவெண் கொண்ட நிசான் டெரோனா காரைச் சோதனைச் செய்தனர்.

காரின் ஓட்டுனர் மற்றும் அதில் பயணம் செய்த இரண்டு நபர்களை விசாரணை செய்ததில், காரினை ஓட்டி வந்தவர் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் ராஜேஷ் கண்ணன் (வயது 42) என்பது தெரிய வந்தது. உடன் வந்தவர்களில் ஒருவர் மயிலாடுதுறை மாவட்டம். கொருக்கையைச் சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் லட்சுமணன் (வயது 64) என்பதும், அவர் காரினை ஓட்டி வந்த ராஜேஷ் கண்ணனின் நண்பர் என்பதும், மற்றொருவர் சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தைச் சேர்ந்த சுந்தரம் மகன் திருமுருகன் (வயது 39) என்பதும், அவர் லட்சுமணனின் மருமகன் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் மூவரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை செய்தனர். மேற்படி காரினை சோதனை செய்ததில் காரின் உள்ளே அவர்கள் மறைத்து வைத்திருந்த 6 சாக்கு பைகளைக் கைப்பற்றி அதனைத் திறந்து பார்த்தபோது அவற்றில் திரிபுரந்தகர், வீணா தர தக்ஷிணாமூர்த்தி, ரிஷப தேவர், அம்மன் / தேவி சிலைகள் என மூன்று சிலைகள் மொத்தமாக ஆறு உலோக சாமி சிலைகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை செய்ததில் மேற்படி ஆறு சிலைகளும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் கொருக்கை கிராமத்தில் உள்ள லட்சுமணனின் வீட்டில் கட்டுமானத்தின்போது தோண்டிய குழியில் இருந்து கிடைத்துள்ளதும், அது குறித்து அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தாமல் வேண்டுமென்றே மறைத்து அதனை தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. லட்சுமணன் இது குறித்து தனது நண்பரான ராஜேஷ் கண்ணனுக்கும், மருமகனுக்கும் சொல்லியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கொருக்கை கிராமம் வந்து மேற்படி சிலைகளைப் பார்த்துள்ளனர். அதன்பின் மேற்படி சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்தி விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று திட்டம் போட்டுள்ளனர். நல்ல பார்ட்டியாகப் பார்த்து அதிக தொகை கிடைக்கும்போது விற்பனைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து சிலைகளை அங்கேயே மறைத்து வைத்து விட்டனர்.

இந்நிலையில் ராஜேஷ் கண்ணனுக்கு மேற்படி சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து ராஜேஷ் கண்ணன் மற்றும் திருமுருகன் ஆகியோர் கொருக்கையில் உள்ள லட்சுமணன் வீட்டிற்கு கடந்த
5 /7/ 2024ஆம் தேதி அன்று இரவு காரில் சென்றுள்ளனர். மறுநாள் காலை மேற்படி ஆறு சிலைகளையும் எடுத்துக்கொண்டு விற்பனைச் செய்ய அதே காரில் திருச்சி வழியாகச் சென்னைக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் மேற்படி காரினைச் சோதனைச் செய்த திருச்சி சிலை திருட்டு தடுப்புப் பிரிவு தனிப்படையானது, மேற்படி சிலைகள் குறித்தும் அதனை வைத்திருப்பதற்கான ஆவணங்கள் குறித்தும் மேற்படி உள்ள நபர்களிடம் விசாரணைச் செய்துள்ளனர். அவர்கள் மூவரும் மேற்படி சிலைகளை வைத்திருப்பதற்கான தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை. எனவே மேற்படி ஆறு சிலைகளையும் தனிப்படை போலீசார் கைப்பற்றினர். திருச்சி சரகர் தனிப்படை காவல் ஆய்வாளர் இது குறித்து அளித்த புகாரின் பேரில் 7 /7/ 2024 ஆம் தேதி அன்று சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் நிலைய குற்ற எண் 6/2024 ச/பி 35 (1)(இ), 106(1) பி என் எஸ் எஸ் 2023 உ/இ 305(டி) பி என் எஸ் 2023 ன் படி வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு, மேற்படி மூவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேற்படி சிலைகள் எந்த கோவிலுக்கு சொந்தமானது என்பது குறித்தும் இதில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவினர் விசாரணைச் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே வழக்கில் 22 கோடிக்கு மேல் தொன்மையான சிலைகள் எதிரிகளுடன் பிடிக்கப்பட்டது, சிலை திருட்டு தடுப்புப் பிரிவு வரலாற்றில் முதல் முறை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சாதனையைச் செய்த அனைத்து அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு உயர் அதிகாரிகள் மிகவும் பாராட்டினார்கள்.
சிலை கடத்தல் டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் IPS, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை தலைவர் டாக்டர் தினகரன் ஐபிஎஸ், சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர் சிவகுமார் ஐபிஎஸ், டிஎஸ்பி பாலமுருகன், ஆய்வாளர் வெங்கடேசன், உதவி ஆய்வாளர்கள் ராஜேஷ் கண்ணன் மற்றும் பாண்டியன், காவல் ஆளுநர் சிவபாலன் மற்றும் அதிகாரிகள் ஆளுநர்கள் ஆகியோர்களுக்கு நமது விஜிலென்ஸ் அரசியல் மற்றும் புலனாய்வு இதழ், விஜிலென்ஸ் டிவி மற்றும் விஜிலென்ஸ் மக்கள் இயக்கம் சார்பில் மனமார்ந்த கோடான கோடி நல்வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.. தொடரட்டும் உங்கள் அனைவரின் அற்புதமான மகத்தான காவல் பணிகள்..

– ✍️ விஜிலென்ஸ் டாக்டர் பா. தமிழ் பாரதி ஆனந்தன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *