லஞ்சம் வாங்கிய VAO தீபா..லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை..
லஞ்சம் வாங்கிய VAO தீபா..லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை..
”
பட்டா பெயர் நீக்கத்திற்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை, நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தீபா (43). இவர் கபிலர்மலை அருகே கொந்தளம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜெகநாதன் (45) என்பவர் தனது பூர்வீக சொத்து பட்டாவில் இருந்து பெயர் நீக்கம் செய்ய விண்ணப்பித்துள்ளார். இதற்காக கிராம நிர்வாக அலுவலர் தீபா ஜெகநாதனிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். எனினும், லஞ்சம் அளிக்க மனமில்லாத ஜெகநாதன் இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூ. 25 ஆயிரம் ரொக்கப்பணத்தை இன்று மாலை விஏஓ தீபாவிடம், ஜெகநாதன் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓ தீபாவை லஞ்சப் பணத்துடன் கையும் களவுமாக கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுபாஷினி, இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தீபாவின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பற்றி போலீசார் எதுவும் தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் லஞ்ச வழக்கில் கிராம நிர்வாக அதிகாரிகள் சிக்குவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
✍️ நாமக்கல் சௌந்தர்